ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, 'ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?' என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது 'விக்கிலீக்ஸ்'.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.
16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே "It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police" என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D.
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே 'ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்' என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே 'சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்' என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். 'வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள்.
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் 'ஓ..ஒரு தெய்வம்... படி தாண்டி வருதே..' என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் 'விக்கிலீக்ஸ்'.
ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிவிட்டது.
விக்கிலீக்ஸ் தளத்தின் இன்றைய வழங்கி (ப்ரான்ஸ்) தகவல்கள்.
பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.
எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே?, எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.
Tor - The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் 'இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?' என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;).
முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.
Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :).
Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.
ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.
ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு.
நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் " நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்' என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.
வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் "நேர்மையான' போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.
நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. 'இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை 'அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்' என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.
ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.
பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.
ஓவ்வொரு வாரமும் கூட ஒரு பெண்டகன் ஆவணத்தை எங்களால் வெளியிட முடியும் - ஜூலியன் :)
அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.
ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. "நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்", இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.
ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது.
அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. 'பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்...' என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். "உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்" என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை :).
இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் "அறிவு"க்கும் பெயர் போனவர். இவரின் 'புத்தி'சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம் :D. சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?... அடுத்த பகுதியில்.
அநீதிகளைத் தடுப்பதற்கான முதல்படி, அநீதிகள் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது தான் - ஜூலியன்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்