http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com இந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும் செய்தி ?

a

"எப்படியாவது சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது விமானத்துல போயிப் பாத்துரணும்" என்று வானம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த சமூகம், "போன தடவ கிங்பிஷ்ஷர்ல போனேன், சும்மா கலக்குறாளுங்கப்பா" என்று கிறுகிறுத்துக் கிறங்கிப் போவது வழக்கமாகிவிட்ட நிலையில், 2020ல் அண்ட சராசரங்களையும் துண்டுதுண்டாக்கப் போகும் நாளைய வல்லரசான இந்தியாவின் விமான நிலையங்களின் தரம் என்ன?, தொழில்நுட்ப வசதிகள் என்ன?, பாதுகாப்புத் தரம் என்ன? என்று பல என்னக்கள் குறித்து மங்களுரின் விமான விபத்தின் வெடிச்சத்தத்தில் அலறி விழித்திருக்கும் நம்மனைவருக்குமானப் பகிர்வே இப்பதிவு.


வான்போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் நல்ல தொடர்பு நிலையில் தரையிறங்கிய விமானம், ஓடுபாதையில் வெடித்துச் சிதறிப் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இச்செய்தியைச் சேகரிக்கும் பொருட்டே முதல்முறை மங்களூர் விமானதளத்திற்குச் சென்றவர்களைப்போல், ஊடகங்கள் விளம்பர இடைவேளைக்கிடையே "table top runway, table top runway" என்று கூவி, மக்களையும் கலவரப்படுத்தி தம் பணிகளைச் செவ்வனே செய்தன.


"table top" ஓடுதளம் என்றால் என்ன?. ஒரு மேஜை மேல் இருப்பதைப் போல் இரண்டு எல்லையிலும் பள்ளத்தாக்காகவோ அல்லது மலைச்சிகரங்களாகவோ இருந்தால் அது "table top" ஓடுதளம் எனப்படும். உலகில் இது போலவும், இதற்கு மேலும் அபாயகரமான இடங்களிலெல்லாம் ஒடுதளங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் தினமும் விபத்துகள் இல்லாமல் தான் விமானங்கள் மேலெழும்பியும், தரையிறங்கியும் பொழுது போய்க்கொண்டு தான் இருக்கிறது.


விபத்துக்குள்ளான போயிங் 737-800 வகை விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. புதிதாகக் கொள்முதல் செய்து மூன்று வருடங்களே ஆகின்றது, முறையான பராமரிப்பில் இருந்திருக்கிறது. பணியிலிருந்த விமானிகள் இருவரும் அனுபவம் மிக்கவர்கள், பல முறை இதே மங்களூரில் பத்திரமாகத் தரையிறங்கியவர்கள். பின் எப்படி விபத்து?.


அதற்கு முதலில் போயிங் 737-800 வகை விமானத்தைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பு. அதனினும் சிறப்பு இந்தியாவில் "சில" விமானிகள் பணி நேரத்தில் சரக்கடித்து கிர்ர்ரான நிலையில் விமானத்தினை ஓட்டுவது குறித்தும் அதனைத் தடுக்க இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திக்கித் திணறி ஆடிய ஆட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்வதும் ஆகும். பணிநேரத்தில் விமானிகள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் பொறுப்பினை க்ளென்பெடிச் வகையறாக்கள் வசம் ஒப்படைக்கும் வழக்கத்தினைக் கண்ட இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் விமானிகளை அதிரடியாக போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தியதும், பல விமானிகள் மாட்டியதும், ஆனாலும் சில காரணங்களுக்காக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதும், பின்னர் இது போன்ற சோதனைகளுக்கு விமானிகள் எதிர்ப்புத் தெரிவித்ததும், எதிர்ப்பைக் கண்ட வீரதீர விமானப் போக்குவரத்துத் துறை சோதனைப் பொறுப்பை விமான நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து ஒதுங்கியது வரை வரலாறாக இருந்தாலும், ஊடகங்களுக்குச் சப்பையானச் செய்தியாகப் போனதால் மக்கள் பார்வையில் கவனிக்கப்படாமலே போய்விட்டது சோகம்.


தொழில்நுட்ப காரணங்கள் தவிர, ஒரு விமானம் தரையிறங்குவதையும், மேலெழும்புவதையும் தீர்மானிக்கும் விசயங்களில் மிக முக்கியமானது விமானத்தின் மொத்த எடை (பயணிகள் மற்றும் பொருட்கள் உட்பட) மற்றும் ஓடுதளத்தின் தூரம். போயிங் 737-800 வஸ்துகள் 65 முதல் 85 டன் எடையுடன் பயணிக்க ஏதுவானவை. மொத்த எடைக்கேற்ப 2.4 முதல் 2.5 கிலோமீட்டர் ஓடுதளத்தின் நீளம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தேவையான அளவை விட கொஞ்சம் கூடுதல் நீளத்துடம் ஓடுதளத்தினை அமைப்பது பாதுகாப்பானது என்பதை முதல் பந்தியில் இடம் கிடைத்தால் பக்கத்து இலையையும் சேர்த்துப் பிடித்து வைக்கும் நமக்குச் சொல்லத் தேவையில்லை :).

2006ஆம் ஆண்டு முதல் 2.45 கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுதளத்துடன் பன்னாட்டு விமான நிலையமாக உருவெடுத்த மங்களூர் விமான நிலையம், இந்தியாவில் மூன்று table top விமான நிலையங்களுள் ஒன்று. மற்றவை கேரளத்தின் கோழிக்கோடு மற்றும் மிசோரமின் லெங்புய் விமான நிலையங்கள். இதில் மங்களூரைப் போலவே பெரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம் 2.7 கிலோ மீட்டர் நீளம் என்பதையும், மங்களூரில் 2.45 கிலோ மீட்டர் மட்டுமே என்பதையும் ஒப்பிட்டு, இந்திய தேசியத்தின் இறையாண்மையை மாசுபடுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.


மே மாதம் 22ஆம் தேதி விபத்து நடந்திருக்கிறது, சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு மே 15ஆம் தேதி மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதை 2.7 கிலோ மீட்டராக நீளப்படுத்தப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூவியிருப்பதை பழைய செய்தித்தாள்களின் ஓரங்களில் தேடிப்பார்த்தால் காணக் கிடைக்கலாம். உலகில் விமானி இறந்து போன அனைத்து விமான விபத்துக்களுக்கும் விமானிகளின் தவறே காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வாழ்க விசாரணைக்குழு.


விமானத்தின் ஓடுபாதைக்கருகிலேயே வெடித்த ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டியை மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பது, தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் கருப்புப் பெட்டியை அதற்கு முன்பு பார்த்திருப்பார்களோ என்ற சிந்தனையைத் தட்டி எழுப்புவதைத் தவிர்க்க முடியவில்லை.
 


பயணிகள் தங்கள் பங்குக்கு பாதுகாப்புக்காக என்னென்ன செய்யலாம்?. பொழுதுபோகாமல் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதை மருந்து சோதனையைக் கட்டாயமாக்கச் சொல்லி தெரு முக்கில் கூட்டமாகக் கோஷம் போடலாம். மற்றவர்கள் விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெற்றதும் எந்த வகை விமானத்தில் பயணிக்கிறோம், அதன் அதிக பட்ச எடை கொள்ளளவு என்ன, தேவைப்படும் ஓடுதளத்தின் நீளம், பயணத்தின் போது எந்தெந்த விமான நிலையங்களில் தரையிறங்கி, மேலெழும்பப்போகிறோம், அந்த விமான நிலையங்களின் தொழில்நுட்ப தரம் என்ன, ஒடுதளத்தின் விவரங்கள், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் ரேடார் வசதிகள் ஆகிய தகவல்களை முடிந்தவரை திரட்டி வைத்து உங்கள் பயணத்தின் பாதுகாப்பினை எடை போட முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

முதலில் விமானத்தில் பயணம் செய்யும் அன்பர்கள் ஒரு சுவை, மணம், திடம் என்ற மூன்று நற்குணங்களும் நிறைந்த ஒரு விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது நன்று. காரணம் பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் பேரரசுவிடம் கொடுத்து படம் எடுக்கச் சொல்வதை ஒத்த விளைவுகளை, போதிய வசதிகளற்ற விமான நிலையமும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையமும் ஒரு தரமான விமானத்திற்கும், அனுபவமிக்க விமானிக்கு ஏற்படுத்த முடியும்.


வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் செயல்படும் விதத்தினைத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். ஒரு முழுமையான வசதிகளை உடைய விமான நிலையம் அமைப்பதற்கு பணப்பை கனமாக இருத்தல் முதல் தகுதி. ஓடுதளங்கள் தரமாக, சுத்தமாக போதிய இடைவெளியில் தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். விமானங்கள் அசுர வேகத்தில் பல டன் எடையுடன் தரையிறங்கும் நொடிகளில், விமானத்தில் சக்கரங்கள் சுற்றாது. அப்படியே ஓடுதளத்தில் உராய்ந்து காதுக்கிதமாக ஒலியெழுப்பி, சில நொடிகளுக்குப் பின்னரே சுற்றத் தொடங்கும் (spin-up time). அந்த உராய்வுகள் மூலமாக ஒடுதளத்தில் சக்கரங்களின் ரப்பர், படிமங்களாக படிய ஆரம்பிக்கும்.


அப்படிமங்களை அப்படியே விட்டுவைத்தால் சில மாதங்களுக்குப் பிறகு தரையிறங்கும் விமானங்களின் சக்கரங்களைப் போதியக் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடச் செய்ய வைக்கும் திறன் கொண்டது. எனவே போதிய இடைவெளியில் ஒடுதளத்தினை விளக்குமாறு வைத்துக் கூட்டாமல், தகுந்த உபகரணங்களையும், தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.



அதற்கடுத்த விஷயம் 'hydraplaning'. நவம்பர் மாத மழை நாட்களில், தாவணிகளையோ அல்லது சுடிதார்களையோ மடக்க, தங்கள் மோட்டார் சைக்கிள்களை மடக்கி, வழுக்கி விழுந்தவர்களுக்குப் புரியும் hydroplaning எவ்வளவு அபாயமானதென்று. அனுபவமிக்கவர்கள் பின்னூட்டத்தில் குமுறவும். மோட்டார் சைக்கிளுக்கே இந்த நிலைமையென்றால் சுமார் 85 டன் எடையுடன் அதிவேகத்தில் தரையிறங்கும் விமானத்திற்கு என்னாவாகும் என்று சொல்லத்தேவையில்லை. அதிக மழை நீர் தேங்கிய அல்லது ஈரப்பதம் அதிகமான ஓடுதளங்கள் உபயோகத்திற்கு தகுதியற்றவை. மழை நீர் வடியத் தகுந்தவாறு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உலக அளவில் அதிகமாக மழை பெய்யும் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களில் ஓடுதளங்களில் விமானச் சக்கரங்களுக்கு அதிக உராய்வுத் தன்மை அளிப்பதற்காக grooving என்ற முறை பின்பற்றப் படுகிறது. பார்க்கப் படம்.


இவற்றுக்கெல்லாம் மேலே, மிக மிக முக்கியமானது ரேடார்கள். பெரும்பாலும் இரண்டு வகையான ரேடார்கள் விமான நிலையங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒன்று surveillance radar எனப்படும் தொலைதூர கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 250 முதல் 300 கி.மீ). , மற்றது precision approach radar என்னும் குறைந்த தூரக் கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 20முதல் 50 கி.மீ.). நூறு சதவிகித பாதுகாப்புக்கு இவ்விரண்டு ரேடார்களுமே இருப்பது மிகமிக முக்கியம், அவசியம், அத்தியவாசியம் மற்றும் பிற. சரி, இந்திய விமான நிலையங்கள் அனைத்திலும் இவ்வசதிகள் இருக்கின்றதா என்று பிரபுல் படேலுக்கே தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை.


இதில் இரண்டாம் வகையான precision approach radar மூலம் விமானம் மிகச் சரியாக ஓடுதளத்தில் எந்த பகுதியில் தரையிறங்குகிறது என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் முன்கூட்டியே விமானியை எச்சரிக்கவும் முடியும் என்பது உபரித்தகவல். ஒரு விமானம் தரையிறாங்கவோ அல்லது மேலெழும்பவோ, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் படி இவ்விரண்டு வகை ரேடார்க்ளில் ஏதெனும் ஒன்று இருந்தாலே போதுமானது, என்ற வாதத்தினை இறைவேதமாகக் கொண்டு தான் இந்திய விமான நிலையங்கள் கட்டமைக்கப் படுகின்றன என்பது வருத்தமான உண்மை.

நடிகர் அஜீத் தவிர்த்த நாட்டின் முக்கியத் "தலை"கள் :D (பிரதமர், ஜனாதிபதி மற்றும் சிலர்), சில குறிப்பிட்ட இடங்களுக்கு விமானத்திலும், மற்ற இடங்களுக்கு ஹெலிகாப்டரிலும் செல்வதைக் கூர்ந்து கவனித்திருந்தால் இதில் பொதிந்திருக்கும் உண்மை புரிந்திருக்கும். இனிமேல் இது போன்ற செய்திகளை கூர்ந்து கவனிக்க வாழ்த்துக்கள். விமான நிலையங்களின் தொழில்நுட்பத் தரத்தினையும், பிற வசதிகளையும் முழுமையாகப் பொதுமக்களுக்குச் சேரும் வகையில் தெரிவிக்காத வரையில் மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அபாயகரமான விமானப் பயணங்களில் தலையைக் கொடுப்பதைத் தடுப்பது கடினம். பொதுப் பயன்பாட்டிலுள்ள விமான நிலையங்களின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் அரசைப் பகிரங்கப் படுத்தச் சொல்லி வாசகர் கடிதமோ அல்லது இது உங்கள் இடத்திற்கோ எழுதாமல், யாரேனும் பொதுநல வழக்குத் தொடர்ந்தால் நாளைய வரலாற்றில் இடம்பெறலாம்.

மங்களூரில் ஓடுபாதையின் தொடக்கப் பகுதியில் (runway threshold) இறங்காமல், சிறிது தூரம் தாண்டித் தரையிறங்கிய காரணத்தால், ஒடுதளத்தின் நீளமான 2.45 கிலோமீட்டரை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல், ஒடுதளத்தின் தடுப்புச் சுவற்றினை இடித்துத் தாண்டிச் சென்று வெடித்துச் சிதறிய விமானத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்கும் மற்றும் மங்களூர் விமான நிலையத்தில், table top ஓடுதளங்களுக்கு மிகமுக்கியமான precision approch radar வசதி இல்லையென்றாலும், குத்துமதிப்பாகவே பலமுறைச் சரியாக தரையிறங்கி, ஒருமுறை தவறாகத் தரையிறங்கிய விமானியே மங்களூர் விபத்துக்குக் காரணம் என்று கூறப்போகும் விசாரணக்குழுவிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
மேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுள், சென்னை தவிர்த்து மற்றெந்த விமான நிலையத்திலும் இரண்டு வகை ரேடார் வசதிகளும் இல்லை என்பதும், கடந்த பத்து வருடத்தில் சுமார் பத்து மடங்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்ட இந்திய வான்வெளியைக் கட்டி மேய்க்கும் இந்திய வான் போக்குவரத்துத் துறை நவீனமயமாகாமல் பத்து வருடங்களுக்குப் பிந்திய கால கட்டத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதும் கவலையளிக்கக் கூடிய மற்றும் வெறுப்பேத்தும் விஷயங்கள். ஜனநாயகத்தின் பலவீனங்களின் சந்துகளில் உறங்கியே கொழுத்துப் போன அரசு இயந்திரங்கள் ஒழுங்காகச் செயல்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படப்போவதில்லை.

ஒரு பயணியாக, விமானப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு மாறுபட்ட பார்வையினை உங்களிடம் இப்பதிவு ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக் கொண்டு, எதிர்காலத்தில் விமானிகளுக்குக் கட்டாய போதை மருந்து சோதனை, விமான நிலையங்களின் அனைத்து விவரங்களையும் மக்களின் பார்வைக்கு வைப்பது, மற்றும் விமானிகள் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பில் இருக்கும் போது பேசுவதைப் பயணிகளும் கேட்கும் வகை செய்வது போன்றவை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடரை நிறைவு செய்து சுடுதண்ணி விடைபெறுகிறது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post